ஊரடங்கு சட்டம் போட்டாலும் கொழும்புக்கு நாங்கள் வந்தோம். நாம் யாருக்கும் அஞ்சப்போவதில்லை. யாருடைய பலம் இது.மக்களுடைய பலம் இது. இதை யாராலும் அசைக்க முடியாது. இந்தப் போராட்டதை நாம் நிறுத்தப்போவதில்லை. மஹிந்த குடும்ப ஆட்சியினால்தான் இன்று மக்கள் கஷ்டத்தில் விழுந்துள்ளார்கள் என்று காலிமுகத்திடலில் போராட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் தெரிவித்தார்கள்.
கொழும்பில் இடம்பெறும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் விசேடமாக வழங்கிய கருத்துக்களை இங்கு தருகின்றோம்.
கோட்டா கோ கம போராட்டக்களத்தின் ஏற்பாட்டாளர்
நாட்டில் ஆட்சிமாற்றமொன்றை ஏப்ரல் 09 ஆம் திகதி முதல் 94 நாட்களுக்கும் மேலாக கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர், யுவதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வ
ருகின்றோம். எனினும் எமது கோரிக்கைகைள செவிமடுக்காத வகையிலேயே ஆட்சியாளர்கள் செயற்பட்டனர். நாட்டு மக்கள் வரிசையில் நிற்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் சமூக ரீதியிலும் எமது மக்கள் நிர்க்கதிக்கு உள்ளாகினர். முழு நாடும் பாரிய அழிவுப் பாதையை நோக்கி சென்றது. நாட்டு மக்களின் கழுத்தை நெரிக்கும் வகையில் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்தது.
நாட்டில் தற்போது முறைமை மாற்றமொன்றையே நாம் எதிர்பார்க்கின்றோம். எவ்வித பிரயோசனமுமற்ற முறைமையே நாட்டில் காணப்படுகின்றது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பாராளுமன்றத்துக்கு தெரிவாகுபவர்கள் உள்ளிட்ட சகல விடயங்களிலும் மாற்றமொன்று கொண்டுவரப்பட வேண்டும். நீண்டகால முறைமையுடன் இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். நாடு என்ற முறையில் முன்னோக்கிப் பயணிப்பதற்கு தேவையான வளங்கள் நாட்டில் காணப்படுகின்றன. அதற்கான கால அவகாசம் தற்போது ஏற்பட்டுள்ளது. 13ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை யார் முன்னோக்கிக் கொண்டு செல்லவுள்ளார்கள் என்பது பொறுத்திருந்து பார்ப்போம். சகல துறைகளிலும் வளமிக்க நாடாக எமது நாட்டை மாற்றும் வரை எமது போராட்டம் தொடரும்.
பௌத்த துறவி சுமணரத்ன
பௌத்த பிக்குகளுக்கும் அரசியல் காணப்படுகின்றது. எனினும் அது கட்சிசார்ந்த அரசியல் அல்ல. ஆனால் தற்போது ஒரு சில பௌத்த தேரர்கள் கட்சி அரசியலையே முன்னெடுக்கின்றனர். இதனால் என்னை போன்ற பௌத்த தேரர்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். ஒரு சில தேரர்களின் செயற்பாடுகள் காரணமாக தேரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கௌரவம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. வழமையாக பஸ்களில் நாங்கள் பயணித்தால் எம்மை கண்டவுடன் பயணிகள் எழுந்து அவர்கள் ஆசனத்தை எமக்கு வழங்குவார்கள். ஆனால் தற்போது அந்த கௌரவம் கூட எமக்கு வழங்கப்படுவதில்லை. இதற்கு ஒரு சில தேரர்களின் அரசியல் செயற்பாடுகளே காரணம். அத்துடன் நாட்டின் தலைவர்கள் சுகபோக வாழ்க்கையை வாழவே விரும்புகின்றனர். மக்கள் குறித்து சிந்திக்கும் தலைவர்களை காண முடியவில்லை. இவ்வாறானவ ஆட்சியாளர்கள் நாட்டு மக்களே பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். எரிவாயு, எரிபொருள், பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனது சகோதரர் இராணுவத்தில் கடமைபுரிகின்றார். அவர் அண்மையில் ஒவ்வாமைக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக வைத்தியசாலைக்கு சென்றபோது அவருக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்துகள் வைத்தியசாலையில் இருக்கவில்லை. இவ்வாறான ஒரு நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கையை வாழத்தான் வேண்டும். எனினும் நாட்டு மக்கள் மருந்துகள் இல்லாமல், வரிசையில் நின்று உயிரழக்கும்போது அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கையை வாழ்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இவ்வாறான ஆட்சியாளர்களை விரட்டியடிக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் உருவாக வேண்டும்.
ஸ்ரீதரக்குமார்
கோட்டா பதவி விலகுவாரா என்பதே காலையில் எழுந்தவுடன் நினைவுக்கு வரும் ஒரு விடயமாக உள்ளது. கோட்டா விலகுவாரா இல்லையா என்பதை அடிப்படையாக வைத்தே நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதற்கு பல காரணங்கள் உள்ளன. எமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு எரிபொருள் இல்லை. மனைவி மண்ணெண்ணெய் வரிசையில் பல மணித்தியாலங்கள் காத்திருக்கின்றால். எதனையும் செய்துகொள்ள முடியாத நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதால் அன்றாட செயற்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. நாட்டில் முறைமை மாற்றமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்-
இன்று தினக் கூலிகளாக வேலை செய்பவர்களுக்கு அவர்களின் வருமானத்தை விட செலவு அதிகமாக காணப்படுகின்றது. ஒரு கிலோ பால்மா பைக்கட் 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஒரு தினக் கூலியின் சம்பளம் வெறும் 1000 ரூபாவாகத்தான் இருக்கின்றது.இப்படி இருக்கையில் எப்படி குடும்பத்தை நடத்தி செல்ல முடியும்.
சாதாரண ஒரு காச்சல் வந்தால் கூட அதற்கான மருந்தை பெறுவது என்றாலும் நாங்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மருந்தைக் கூட நாங்கள் கறுப்புச் சந்தையில் அதிக விலைகொடுத்துத்தான் வாங்க முடிகின்றது. இதனால்தான் நாங்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கின்றோம் என்றார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வசமான
அதிபர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகம்
அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ அலுவகம் மற்றும் பிரதம மந்திரி ஆகியோரின் அலுவலகங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலேயே தற்போது உள்ளது. அங்கு வரும் மக்களை வழி நடத்தி உணவு வழங்கி வரிசையிலேயே நின்று பார்வையிடுமாறு அறிவுறுத்துகின்றனர்.
முற்றுகையிட்டு 2 நாட்களின்பின் நேற்றைய நாளான மூன்றாவது நாளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மற்றும் பிரதமரின் முக்கியமான அறைகளை பூட்டி மக்கள் பார்வைக்கு தடைவிதித்து. அதற்கு பாதுகாப்பு வழங்கிவருகின்றனர். இரவு பகலாக அங்கு தங்கியிருக்கும் போராட்டக்காரர்கள் அங்கிருக்கும் மக்களுக்கு உரிய தேவைகளை வழங்கிவருகின்றனர்.
No comments:
Post a Comment